கோவில்பட்டியில் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா உருவப்படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை


கோவில்பட்டியில் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா உருவப்படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 28 Sept 2020 4:45 AM IST (Updated: 28 Sept 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி,

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் விழா நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் சி.பா.ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

‘தமிழர் தந்தை’ என்று அனைவராலும் போற்றப்படுகின்ற அய்யா சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி அய்யா சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பாமரரும் தமிழ் படிக்க வேண்டும், கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக, சி.பா.ஆதித்தனார் ‘தினத்தந்தி’ நாளிதழை தொடங்கி, எளிய நடையில் நடத்தினார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ தமிழ் நாளிதழ் என்ற பெருமையை பெருமளவிற்கு ‘தினத்தந்தி’ நாளிதழ் உயர்ந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாது சி.பா.ஆதித்தனார் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது வழியில், திராவிட இயக்கத்தில் பணியாற்றினார். மேலும் சட்டப்பேரவை தலைவராகவும், கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றி, அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகவும் விளங்கினார். ஆன்மிக செம்மலாகவும், கொடை வள்ளலாகவும் மக்களுக்கு தொண்டாற்றினார்.

சி.பா.ஆதித்தனார் தமிழுக்கு ஆற்றிய தொண்டை மதித்து போற்றி பாதுகாக்க வேண்டும். அவரது புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து பெருமைப்படுத்தி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர் தங்க மாரியம்மாள் தமிழ்செல்வன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன்,

அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, வினோபாஜி, வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story