கிருஷ்ணாபுரம் அணைநீர் 5-வது முறையாக திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின


கிருஷ்ணாபுரம் அணைநீர் 5-வது முறையாக திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 28 Sept 2020 3:38 AM IST (Updated: 28 Sept 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 5-வது முறையாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆந்திரமாநிலம் அம்மப்பள்ளி என்ற இடத்தில் அம்மாநில அரசு கிருஷ்ணாபுரம் அணை கட்டி உள்ளது. இந்த அணை உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணை நிரம்பி வந்ததால் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து இதுவரை 4 முறை கொசஸ்தலை ஆற்றில் தண்ணீரை ஆந்திர மாநில அதிகாரிகள் திறந்து விட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் 5-வது முறையாக சுமார் 300 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பள்ளிப்பட்டு பகுதியை நள்ளிரவு 3 மணி அளவில் கடந்தது.

இதனால் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்கால்பட்டடை, வெளியகரம், நெடியம், சாமந்தவாடா, புண்ணியம் ஆகிய பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதையொட்டி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே புரண்டோடும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தரைப்பாலங்களை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். மேலும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பலர் குடும்பத்தோடு செல்போனில் செல்பி எடுத்து சென்றதையும் காண முடிந்தது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story