கொள்ளிடம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் வயல் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை


கொள்ளிடம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் வயல் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sep 2020 2:21 AM GMT (Updated: 28 Sep 2020 2:21 AM GMT)

கொள்ளிடம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் சம்பா பயிரிடப்பட்டிருந்த வயல் சேதம் அடைந்தது. இதற்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூர் கிராமத்துக்கு எரிவாயு எடுத்துச்செல்வதற்காக கெயில் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தில் வயல்களுக்கு அடியில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. குழாய் பதிக்கும் பணிக்கு தேவையான லாரி போன்ற கனரக வாகனங்கள் வயல்கள் வழியாக ஓட்டிச்செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வயலில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

வயல் சேதம்

இந்த நிலையில் நேற்று வேட்டங்குடியில் உள்ள வயல்களில் லாரி போன்ற கனரக வாகனங்களை இறக்கி ஊழியர்கள் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக அங்கு சம்பா நெல் பயிரிடப்பட்டிருந்த வயல் பகுதி சேதம் அடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்டனர். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் சேதம் அடைந்த வயலுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த நன்செய்-புன்செய் விவசாய சங்க மாவட்ட செயலாளர் வில்வநாதன் கூறுகையில், ‘வேட்டங்குடி பகுதியில் கெயில் நிறுவனம் சார்பில் வயல்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக நெல் விதைப்பு செய்த வயல் சேதம் அடைந்துள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேதம் அடைந்த வயலை கணக்கில் கொண்டு அதற்குரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Next Story