தொழிலாளிகளை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்


தொழிலாளிகளை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Sept 2020 10:20 AM IST (Updated: 28 Sept 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே தொழிலாளிகளை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளத்தை சேர்ந்த ஆவுடை நாயகம் மற்றும் மணிமுத்து ஆகிய 2 பேரும், முறம்பில் செயல்படும் தனியார் ஆலையில் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது செந்தட்டியாபுரம் அருகே அவர்களை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், இவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சாலை மறியல்

இவர்கள் இருவரும் மீது தாக்கியவர்களை கைது செய்யக்கோரி நேற்று அதிகாலையில் அவரது உறவினர்கள் கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து நேற்று காலை 9 மணி அளவில், தாக்கப்பட்ட இருவரின் உறவினர்கள் மற்றும் கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், வாழவந்தாள்புரம் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சங்கரன் கோவில் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க நிவாரணம் வழங்க கோரியும், போலீசாருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இவர்களிடம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டுநமச்சிவாயம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படவில்லை. குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வரை கலைந்து செல்ல மறுத்து பொது மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு அனைவரையும் கைது செய்ய ஏற்பாடு நடைபெற்றது. இதையடுத்து பொது மக்கள், கைதாக மறுத்து சாலையின் நடுவே சாமியானா பந்தல் அமைத்து, மதிய உணவுக்கான ஏற்பாடுகளை செய்தனர். மீண்டும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், ஆவுடை நாயகம் மற்றும் மணிமுத்து ஆகிய 2 பேரை தாக்கியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். ஆதலால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story