விக்கிரவாண்டி, செஞ்சியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை


விக்கிரவாண்டி, செஞ்சியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2020 11:19 AM IST (Updated: 28 Sept 2020 11:19 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி, செஞ்சியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று விகிதம் குறையவில்லை. அதே நேரத்தில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அதிகமாக அளித்து இருப்பதினால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வருதல், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது என்று அரசு சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இதை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் இருந்ததால், முககவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அபராதம் வசூலிப்பு

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் விக்கிரவாண்டி தாசில்தார் தமிழ்செல்வி தலைமையில், செயல் அலுவலர் ஷேக் லத்தீப், மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விசுவநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், மற்றும் களப்பணியாளர்கள் அடங்கிய குழு விக்கிரவாண்டி கடைவீதியில் நேற்று காலை அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்கள், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என்று 25 பேரிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடை உரிமையாளர்களிடம் முக கவசம் அணிந்து பணி செய்ய வேண்டும், கடைக்கு வருபவர்களை கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்துவதுடன், தனிமனித இடைவெளியையும் கடைபிடிப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினர். இதை மீறினால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

செஞ்சி

இதேபோல் செஞ்சியில் கூட்டுரோட்டில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமை தாங்கினார். செஞ்சி தாசில்தார் ராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து, அவர்களுக்கு முககவசத்தையும் போலீசார் வழங்கினர். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், சையது முகமது அலி, பேரூராட்சி துப்புறவு மேற்பார்வையாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story