நெல்லை அருகே 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் மேலும் ஒரு வெடிகுண்டு சிக்கியதால் பரபரப்பு


நெல்லை அருகே 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் மேலும் ஒரு வெடிகுண்டு சிக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Sept 2020 4:45 AM IST (Updated: 29 Sept 2020 12:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாங்குநேரி,

நெல்லை அருகே நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி சண்முகத்தாய் (வயது 45). அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி சாந்தி (40). இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பட்டப்பகலில் 12 பேர் கொண்ட கும்பல் சண்முகத்தாயின் வீட்டுக்கும், சாந்தியின் வீட்டுக்கும் அடுத்தடுத்து சென்றது. அங்கு நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் 2 பேரையும் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பழிக்குப்பழியாக இந்த இரட்டை கொலை நடந்தது தெரியவந்தது. அதாவது, கொலை செய்யப்பட்ட சண்முகத்தாயின் மகன் நம்பிராஜன், அப்பகுதியைச் சேர்ந்த வான்மதியை காதலித்து திருமணம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வான்மதியின் குடும்பத்தினர் நம்பிராஜனை கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக நாங்குநேரியில் ஓட்டல் நடத்திய வான்மதியின் உறவினர்களான ஆறுமுகம், சுரேஷ் ஆகிய 2 பேரும் கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கில் அருணாசலம் மகன்கள் ராமையா, கட்ட சங்கர், சுப்பையா மகன் இசக்கிபாண்டி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். ஆனால், அவர்கள் வெளியூருக்கு சென்று விட்டனர். ஜாமீனில் வந்த ராமையா உள்ளிட்ட 4 பேரையும் தீர்த்து கட்டுவதற்காக மறுகால்குறிச்சிக்கு வந்த கும்பல், அங்கு அவர்கள் இல்லாததால், சண்முகத்தாய், சாந்தி ஆகியோரை படுகொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் செல்லத்துரை, சிவசுப்பு, பெருமாள் மகன்கள் முருகன், செல்வம், மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த மாடசாமி, தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன், முத்துபாண்டி, முத்து உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அருணாசலம் வீட்டின் அருகே உள்ள சுடலைகண்ணு என்பவர் வீட்டின் மொட்டை மாடியில் மர்ம நபர்கள் வீசிச் சென்ற நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடிக்காமல் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு சென்று வெடிக்காத நிலையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். மேலும் அந்த பகுதியில் வேறு எங்கேனும் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை போட்டு சென்று உள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மறுகால்குறிச்சியில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story