கர்நாடகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்: மைசூரு மாவட்ட கலெக்டராக ரோகிணி சிந்தூரி நியமனம் மாநில அரசு உத்தரவு


கர்நாடகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்: மைசூரு மாவட்ட கலெக்டராக ரோகிணி சிந்தூரி நியமனம் மாநில அரசு உத்தரவு
x
தினத்தந்தி 28 Sep 2020 11:39 PM GMT (Updated: 28 Sep 2020 11:39 PM GMT)

கர்நாடகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மைசூரு மாவட்ட கலெக்டராக ரோகிணி சிந்தூரி நியமிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக அரசு பிறப்பித்து உள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சியின் சுகாதாரத்துறை சிறப்பு கமிஷனராக பணியாற்றிய ராஜேந்திர சோழன், பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக இந்து அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றிய ரோகிணி சிந்தூரி மைசூரு மாவட்ட கலெக்டராக இனி பணியாற்றுவார்.

பெங்களூரு மாநகராட்சியின் தோட்டக்கலைத்துறையின் சிறப்பு கமிஷனராக இருந்த ஜே.மஞ்சுநாத், பெங்களூரு மாநகராட்சியின் நிர்வாக பிரிவு சிறப்பு கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ஹெப்சிபா ராணி குர்லபட்டி, பெங்களூரு மாநகராட்சியின் தோட்டக்கலைத்துறையினர் சிறப்பு கமிஷனராக செயல்படுவார்.

கர்நாடக பட்டு சந்தைப்படுத்தல் கழகத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய ரவிக்குமார், கோலார் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதுபோல பஞ்சாயத்து ராஜ் துறையின் இயக்குனராக பணியாற்றிய சிவசங்கர், சிக்பள்ளாப்பூர் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக செயல்படுவார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

மைசூரு மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சரத், பெங்களூரு மாநகராட்சியின் நிர்வாக பிரிவு சிறப்பு கமிஷனராக இருந்த அன்புகுமார், கோலார் மாவட்ட முதன்மை செயல் அதிகாரியாக இருந்த சத்யபாமா, சிக்பள்ளாப்பூர் மாவட்ட முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றிய பவுசியா தரணம் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story