கல்வித்துறை அலுவலகம் முன்பு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்


கல்வித்துறை அலுவலகம் முன்பு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2020 6:29 AM IST (Updated: 29 Sept 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

நிலுவை சம்பளம் வழங்கக்கோரி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கல்வித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுவை அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்களுக்கு கடந்த 9 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே நிலுவை சம்பளம் வழங்க வேண்டும், மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி ஆசிரியர் தினத்தன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதன்முடிவில் கூட்டமைப்பு நிர்வாகிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி அழைத்துப் பேசி விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.

எனவே அரசு நிதிஉதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பென்சன்தாரர்கள் நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக நேற்று காலை கல்வித்துறை வளாகத்தில் அவர்கள் குவிந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நிலுவை சம்பளம் வழங்குவது தொடர்பாக அரசாணை கிடைக்கும் வரை அங்கேயே தங்கி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


Next Story