கீரமங்கலம் அருகே, நிதிநிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை - கடனுக்கு வாங்கிய வாகனத்தை பறிமுதல் செய்து மீண்டும் பணம் கேட்டதால் விபரீதம்
கீரமங்கலம் அருகே கடனுக்கு வாங்கிய வாகனத்தை பறிமுதல் செய்து மீண்டும் பணம் கேட்டு நிதிநிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் வினோத்குமார் (வயது 28). டிரைவரான இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று 2 சரக்கு ஆட்டோக்கள் வாங்கி ஓட்டியுள்ளார். போதிய வருமானம் கிடைக்காததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த இரு வாகனங்களையும் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் வினோத்குமாரிடம் பறிமுதல் செய்த இரு வாகனங்களையும் தனியார் நிதிநிறுவன நிர்வாகம் வேறு நபர்களிடம் விற்பனை செய்துவிட்டனர். ஆனால் அதன் பிறகு கடன் தொகையைவிட குறைந்த தொகைக்கே வாகனங்கள் விற்பனை செய்துள்ளதாக கூறி மீதி தொகையை செலுத்தக் கோரி கடந்த ஒரு வாரமாக தனியார்நிதி நிறுவன ஊழியர்கள் வினோத்குமார் வீட்டிற்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் இருந்ததால் தன்னால், தற்போது கடன் நிலுவை தொகையை கட்டுவதில் சிக்கல் உள்ளதாக கூறியதை தனியார் நிதி நிறுவன ஊழியர் கேட்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட வினோத்குமார் நேற்று காலை விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story