வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க.-கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்


வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க.-கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2020 4:00 AM IST (Updated: 29 Sept 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி கரூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 32 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கரூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் வாங்கல் கடைவீதியில் மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமையிலும், மத்திய நகரம் சார்பில் தாலுகா அலுவலகம் அருகே தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி தலைமையிலும்,

வடக்கு நகரம் சார்பில் அண்ணாசிலை அருகே கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.ம.சண்முகம் தலைமையிலும், தெற்கு நகரம் சார்பில் தாந்தோணிமலையில் சட்டதுறை இணை செயலாளர் மணிராஜ் தலைமையிலும், மேற்கு நகரம் சார்பில் திருமாநிலையூரில் சி.பி.ஐ. (எம்) ஜோதிபாசு தலைமையிலும், தாந்தோணி கிழக்கு ஒன்றியம் சார்பில் வெள்ளியணை கடைவீதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையிலும், தாந்தோணி மேற்கு ஒன்றியம் சார்பில் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் தலைமை செயல் குழு உறுப்பினர் ராஜகோபால் தலைமையிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தோகைமலை பஸ் நிலையம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ராஜ்குமார், ஆதி தமிழர் பேரவை கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கரிகாலன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். இதில், மேற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சசிகுமார், தோகைமலை பொறுப்புக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். இதேபோல் பஞ்சப்பட்டி பஸ் நிலையம் அருகே கிருஷ்ணராயபுரம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாபதி தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தோட்டக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி தலைமையிலும், வேலாயுதம்பாளையம் மலைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையிலும், புகளூர் காகித ஆலை அருகே புதுகுறுக்க பாளையத்தில் ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் சுமங்கலி செல்வராஜ் மற்றும் கரூர் தெற்கு நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையிலும், நொய்யல் குறுக்குச் சாலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் மீனாட்சி கே.ரமேஷ் தலைமையிலும், கரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சேகர் என்கிற குணசேகரன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், கொங்குநாடு மக்கள் தேசியகட்சி மற்றும் தோழமை கட்சி பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத்தில் வேலம்பாடி ஊராட்சி அண்ணாநகரில் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எம்.எஸ். மணியன் தலைமையிலும், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் ஈசநத்தம் ஊராட்சியில் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் என்.மணிகண்டன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குளித்தலை பகுதியில் 5 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா தலைமையிலும், குளித்தலை காந்தி சிலை அருகே ம.தி.மு.க. மாநில இளைரணி செயலாளர் பாலசசிகுமார் தலைமையிலும், மேட்டுமருதூரில் காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் பொன்னுசாமி தலைமையிலும், நச்சலூரில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன் தலைமையிலும், நெய்தலூர் காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 14 பெண்கள் உள்பட 210 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story