விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; தொழிலாளி பலி
விருதுநகர் அருகே குந்தலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த தொழிலாளி பலியானார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டி கிராமத்தில் திருத்தங்கலை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியை கணேசன் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று காலை இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தி பணி தொடங்கியது. ஒரு அறையில் செங்குன்றாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 55) என்பவர் மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது உராய்வு ஏற்பட்டதில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கிருஷ்ணகுமார் பணியாற்றிய அறை இடிந்து தரைமட்டமானது. உடனே ஆலையில் வேலை பார்த்த ஊழியர்கள் ஆலை வளாகத்தை விட்டு வெளியே தப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி குமரேசன் தலைமையில் விரைந்து வந்தனர். இடிபாடுகளில் படுகாயத்துடன் சிக்கி இருந்த கிருஷ்ணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். தீயணைப்பு படையினர் ஆலை வளாகத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகளும் விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து செங்குன்றாபுரம் கிராம நிர்வாக அதிகாரி முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜ், மேலாளர் பாண்டியன், போர்மேன் ஜோதிமுருகன் ஆகியோர் மீது ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story