நிலக்கோட்டை அருகே வழிப்பறி: குத்துச்சண்டை வீரர் உள்பட 3 பேர் கைது
நிலக்கோட்டை அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குத்துச்சண்டை வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலக்கோட்டை,
திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்யும் சம்பவங்கள் நடந்து வந்தன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காமலாபுரம்-பள்ளபட்டி பகுதி இடையே இருசக்கர வாகனங்களில் வருபவர்களை குறி வைத்து 3 பேர் கொண்ட கும்பல் மிரட்டி இருசக்கர வாகனங்கள், செல்போன்களை பறித்து செல்வது வாடிக்கையாக இருந்தது. இந்த வழிப்பறி தொடர்பாக அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் உத்தரவின்பேரில் வழிப்பறி கும்பலை பிடிக்க நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தொடர் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் தனிப்படை போலீசார் நேற்று நிலக்கோட்டை அருகே குல்லிசெட்டிபட்டி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் 3 பேர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (வயது 26), கதிரேசபிரபு (35), அரசராஜன் (30) என்பதும், இவர்கள் தான் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், 1½ பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்டவர்களில், பாலமுருகன் என்பவர் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் தற்போது மராட்டிய மாநிலம் நாக்பூரில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலுக்கு முன்பாக குல்லிசெட்டிபட்டிக்கு வந்த பாலமுருகன், தனது நண்பர்களான கதிரேசபிரபு, அரசராஜன் ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். அப்போது, கஞ்சா வாங்க பணம் இல்லாததால் நண்பர்களுடன் சேர்ந்து அவர் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story