வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள்


வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 Sept 2020 11:09 PM IST (Updated: 29 Sept 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

ஈரோடு,

உலக வெறிநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு ஸ்டேட் வங்கி ரோடு மாவட்ட பன்முக கால்நடை மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடந்தது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்கள் கொண்டு வந்திருந்த வளர்ப்பு நாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் வெறிநோய் (ரேபீஸ்) தடுப்பு ஊசி போட்டார்கள்.

தடுப்பூசி

கலெக்டர் சி.கதிரவன் பேசும்போது, வெறிநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் பாதிப்பை பொதுமக்கள் தெரிந்து கொண்டு செல்லப்பிராணிகள் வளர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு ஊசியின் முக்கியத்துவத்தை அறிந்து கண்டிப்பாக தடுப்பூசிகள் போட வேண்டும். முதல் கட்டமாக வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போடுவது கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து தெருவில் சுற்றித்திரியும் நாய்களை மாநகராட்சி மூலம் பி்டித்து அவைகளுக்கும் வெறிநோய் தடுப்பு ஊசி போடப்படும். பொதுமக்கள் கண்டிப்பாக வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோபியில்..

இதுபோல் கோபியிலும் முகாம் நடந்தது. இந்த 2 முகாம்களிலும் சேர்த்து நேற்று 354 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வெறிநோய் தடுப்பு ஊசி தனியார் கால்நடை மருந்தகங்களில் கிடைக்கும். அவற்றையும் பொதுமக்கள் வாங்கி தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் செலுத்தலாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story