மின்சார ரெயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி எப்போது? வழிமுறையை கண்டறிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


மின்சார ரெயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி எப்போது? வழிமுறையை கண்டறிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Sept 2020 3:26 AM IST (Updated: 30 Sept 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

மும்பையின் உயிர் நாடியாக விளங்கும் மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிப்பதற்கான வழிமுறையை கண்டறியுமாறு மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மும்பையின் உயிர்நாடியாக மின்சார ரெயில் போக்குவரத்து விளங்குகிறது.

அத்தியாவசிய பணியாளர்கள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 23-ந் தேதி மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. தினமும் சுமார் 80 லட்சம் பேர் பயணம் செய்யும் மின்சார ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்காக மட்டும் குறைந்த அளவில் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிக்க சுகாதார ஊழியர்கள், மத்திய- மாநில அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

வழியை கண்டறிய உத்தரவு

இந்த நிலையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கான மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி கேட்டு வக்கீல்கள் தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட்டு விசாரித்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி திபான்கர் தத்தா அடங்கிய அமர்வு மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிப்பதற்கான வழிமுறையை கண்டறியுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் இது குறித்து பதில் அளிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘பொதுமக்கள் ஊரடங்கால் பட்டினி கிடக்கின்றனர், வேலையையும் இழந்து உள்ளனர். அலுவலகத்தில் பொது மேலாளராக இருந்தவர் லாரி டிரைவராகி உள்ளார். சிலர் காய்கறி விற்கின்றனர். பலர் வேலைக்கு திரும்பவேண்டிய நிலையில் உள்ளனர். எனவே அதற்கான வழியை நீங்கள் (அரசு) கண்டுபிடிக்க வேண்டும்” என்றனர்.

ஆதித்ய தாக்கரே தகவல்

இதற்கிடையே அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் மின்சார ரெயில் சேவைகள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்படும் மின்சார ரெயில்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். நாம் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி உள்ளது. அதற்காக ரெயில்வே நிர்வாகத்துடன் பேசி வருகிறோம். சேவைகள் அதிகரிக்கப்படும் போது பயணிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். அல்லது மற்ற போக்குவரத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும். அக்டோபர் மாத மத்தியில் மின்சார ரெயில் சேவையை தொடங்கலாம்.

முதல்-மந்திரி முடிவு எடுப்பார்

இதற்காக நாம் மற்ற பொது போக்குவரத்தையும் தொடங்க வேண்டி உள்ளது. மின்சார ரெயில் சேவை தொடங்குவதற்கான இறுதி முடிவை முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் ரெயில்வே நிர்வாகம் சேர்ந்து எடுப்பார்கள். ஏற்கனவே தொடங்கிய விஷயங்களை நிறுத்த கூடாது என்பதற்காக ஊரடங்கை தளர்த்துவதில் நிதானமாக செயல்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story