முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வீட்டு தனிமையில் சிகிச்சை


முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வீட்டு தனிமையில் சிகிச்சை
x
தினத்தந்தி 29 Sep 2020 10:50 PM GMT (Updated: 29 Sep 2020 10:50 PM GMT)

முதல்-மந்திரியின் அரசியல் செயலாளரான, ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரு,

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதியில் இருந்து, கர்நாடக சட்டசபைக்கு பா.ஜனதா சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் ரேணுகாச்சார்யா. இவர் முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளரும் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவர் நேற்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் டாக்டரின் அறிவுரையின்பேரில், பெங்களூருவில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தனிமையில் இருங்கள்

இந்த நிலையில் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

9 முறை என்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தேன். அப்போது எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று வந்தது. நேற்று(நேற்று முன்தினம்) உடல்நலக்குறைவு காரணமாக கொரோனா பரிசோதனை செய்தேன். இதில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. டாக்டரின் அறிவுரைப்படி வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தனிமையில் இருங்கள். கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் 80-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி, மாநிலங்களவை உறுப்பினர் அசோக் கஸ்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணராவ் ஆகியோர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story