திருவள்ளூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு


திருவள்ளூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 30 Sept 2020 5:22 AM IST (Updated: 30 Sept 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை திருடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு அயத்தூர் ஈசன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல காலை வெங்கடேசன் தொழிற்சாலைக்கு சென்றுவிட்டார். 11 மணி அளவில் அவரது மனைவி சசிகலா வீட்டை பூட்டிவிட்டு வேப்பம்பட்டில் உள்ள வங்கிக்கு தனது குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றார்.

மதியம் 12.30 மணி அளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 27 பவுன் தங்க நகையும், ஒரு மடிக்கணினியும் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சசிகலா செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் சக்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35) .இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க நகையும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களும், ரூ. 12 ஆயிரத்து 500-ம் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து சுரேஷ் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story