தென்காசி மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் 6-ந்தேதி கடைசி நாள்


தென்காசி மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் 6-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 30 Sept 2020 5:43 AM IST (Updated: 30 Sept 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 6-ந்தேதி கடைசிநாள் ஆகும்.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு பணியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்காசி மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள சத்துணவு மையங்களில் 148 அமைப்பாளர்கள், 77 சமையலர்கள், 189 சமையல் உதவியாளர்கள் என மொத்தம் 414 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். சமையலருக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமையல் உதவியாளருக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்கவேண்டும். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோரில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டும், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், சத்துணவு அமைப்பாளர்களுக்கு அதிகப்பட்ச வயது வரம்பு 43 ஆகும்.

அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இன சுழற்சி முறை பின்பற்றப்பட மாட்டாது. ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளுக்கு அரசாணையின்படி இன சுழற்சி முறை பின்பற்றப்படும். இனசுழற்சி அல்லாத மற்றும் இன சுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட உள்ள மொத்த பள்ளி சத்துணவு பணியாளர்கள் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் ஆகியவை www.tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் அல்லது சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி அலுவலக விளம்பர பலகையில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப படிவத்துடன் கல்வி சான்று, வயது சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமை தகுதிகளுக்கான சான்று ஆகியவற்றின் நகல்களுடன் வருகிற அக்டோபர் மாதம் 6-ந் தேதிக்குள் (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிரப்பப்படவுள்ள காலியிடங்களுக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பப்படும். நேர்காணலுக்கு வரும்போது அசல் நேர்காணல் அழைப்பு கடிதம் மற்றும் அசல் சான்றுகள் தவறாமல் எடுத்து வரவேண்டும். அனைத்து சான்று நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 6-ந்தேதி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Next Story