புதைக்க இடம்தர மறுத்ததால் மூதாட்டி உடலை ரோட்டில் வைத்து போராட்டம் - ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு


புதைக்க இடம்தர மறுத்ததால் மூதாட்டி உடலை ரோட்டில் வைத்து போராட்டம் - ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 30 Sept 2020 10:26 AM IST (Updated: 30 Sept 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியின் உடலை புதைக்க இடம்தர மறுத்த தனிநபரை கண்டித்து, சாலையில் பிணத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியை சேர்ந்தவர் அபுரம்மாள் (வயது 75). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இதனால் புள்ளானேரி ஏரிப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அவருடைய உடலை புதைக்க நேற்று ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது தனிநபர் ஒருவர் இந்த இடம் எனது பெயரில் உள்ளது. இதற்கான ஆவணங்கள் என்னிடம் இருப்பதால் உடலை இங்கு புதைக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அங்கு உள்ள சாலையின் நடுவில் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் மண்டல துணை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் நந்தினி, கிராம நிர்வாக அலுவலர் அருணா, ஊராட்சி செயலாளர் மலர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனிநபர் கூறுகையில் இறந்தவர்களின் உடலைகளை புதைக்க எங்கள் நிலத்தில் இருந்து தனியாக இடம் ஒதுக்கி உள்ளோம். அங்கு புதைக்கலாம் என்று கூறி உள்ளார். ஆனால் தனியாக இடம் ஒதுக்குவதற்கு முன்பு அபுரம்மாளின் கணவர் உடலை, தனிநபர் நிலத்தி புதைத்துள்ளனர். எனவே அந்த இடத்தில்தான் அபுரம்மாள் உடலையும் புதைப்போம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை மூலம் இறந்தவரின் உடலை, அவரது கணவர் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே புதைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story