மாவட்ட செய்திகள்

கோவையில் பயங்கரம்: கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைது - அடகு வைத்த நகையை மீட்டு தராததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் + "||" + Terror in Coimbatore: Woman arrested for killing husband

கோவையில் பயங்கரம்: கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைது - அடகு வைத்த நகையை மீட்டு தராததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்

கோவையில் பயங்கரம்: கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைது - அடகு வைத்த நகையை மீட்டு தராததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்
அடகு வைத்த நகையை மீட்டு தராததால் ஆத்திரம் அடைந்த பெண், தனது கணவரை கொன்று நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. கோவையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கோவை,

கோவை வெரைட்டிஹால் ரோடு திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 40). இவர் பீளமேட்டில் உள்ள எலக்டிரானிக்ஸ் ஷோரூமில் விற்பனை ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கரோலின் (35). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு கரோலின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். வீட்டில் பிராங்கிளின் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் கரோலின் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிராங்கிளினை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிராங்கிளின் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதைத் தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்த வெரைட்டிஹால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து தலைமையில் போலீசார்சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ‘நான் காய்கறி வெட்டிக்கொண்டு இருந்தபோது தூக்க கலக்கத்தில் வந்த கணவர் தடுமாறி கத்தி மீது விழுந்துவிட்டதாக” கரோலின் கூறினார். ஆனால் போலீசார் அதனை நம்பவில்லை.

அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவித்துருவி விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் கரோலின் கணவரை கொன்று நாடகமாடியது அம்பலமானது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கரோலின் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா காரணமாக எனது கணவர் வேலை பார்த்த ஷோரூம் மூடப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டோம். எனது 3 பவுன் தாலி சங்கிலியை அடகு வைத்து செலவு செய்யலாம் என்று எனது கணவர் கூறினார். அதற்கு நானும் ஒப்புக்கொண்டு நகையை கழற்றிக் கொடுத்தேன். இப்போது எனது கணவர் வேலைக்கு சென்று விட்டார். அதனால் அடகு வைத்த நகையை மீட்டுக்கொடுக்கும்படி நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் மீட்டுத்தராமல் காலம் கடத்தி வந்தார். கிடைக்கும் பணத்தை அவர் ஜாலியாக செலவு செய்து வந்தார். இதனால் எனக்கும், எனது கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் காலையிலும் நகையை மீட்டு கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அவர் என்னை பிடித்து கீழே தள்ளினார். நான் கீழே விழுந்தேன். எனது நகையை மீட்டு தராதது மட்டுமல்லாமல், என்னையும் தாக்கியதால் ஆத்திரமடைந்த நான் சமையலறையில் இருந்த கத்தியால் அவரை குத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனைவியே கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.