கூடலூரில் டாக்டர்கள், நர்சுக்கு கொரோனா: தனியார் ஆஸ்பத்திரி மூடல்


கூடலூரில் டாக்டர்கள், நர்சுக்கு கொரோனா: தனியார் ஆஸ்பத்திரி மூடல்
x
தினத்தந்தி 30 Sept 2020 3:00 PM IST (Updated: 30 Sept 2020 2:41 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் டாக்டர்கள், நர்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரி மூடப்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் கூடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 2 டாக்டர்கள் மற்றும் நர்சுக்கு உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி ஆஸ்பத்திரி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து டாக்டர்கள், நர்சு ஆகியோரை ஆஸ்பத்திரி அருகே உள்ள மருத்துவ குடியிருப்பு வளாகத்தில் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் ஆஸ்பத்திரி நுழைவு வாயில் இரும்பு கதவு இழுத்து மூடப்பட்டது.

இதேபோல் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி ஆத்தூர் குக்கிராமத்தில் 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அங்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதித்து உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சிலர் மேட்டுப்பாளையம் சென்றுவிட்டு, திரும்பி வந்து தங்களது ஆத்தூர் கிராம மக்களிடம் அழைப்பிதழ் கொடுத்து உள்ளனர். இதனால் கிராமத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர நெலாக்கோட்டை உள்பட கூடலூர் பகுதியில் ஒரே நாளில் 23 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலர் வெளிமாவட்ட கணக்கில் சேர்க்கப்படுவார்கள் என்றனர்.

Next Story