முத்துப்பேட்டை அருகே, லாரி- கார் மோதல்; 6 பேர் படுகாயம் - டிரைவர் கைது
முத்துப்பேட்டை அருகே லாரி மீது கார் மோதி விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அடுத்த வரம்பியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி அருகில் உள்ள தனது குலத்தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு காரில் சென்றுவிட்டு நேற்று அதிகாலை ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். காரை டிரைவர் சரவணன் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டி நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது முன்புறம் சென்றுகொண்டிருந்த லாரி மீது பின்பக்கமாக கார் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த செந்தில்குமார்(வயது45), அவரது மனைவி மேனகாசுந்தரி(40), கார்த்திகேயன்(13), பிரகதீஸ்வரன்(18), காந்தி (34), காந்திராகுல் (12) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி சென்ற டிரைவர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story