ஸ்டூடியோ உரிமையாளருக்கு வெடி பொருள் அனுப்பிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
நீடாமங்கலத்தில் ஸ்டூடியோ உரிமையாளருக்கு பார்சலில் வெடி பொருட்கள் அனுப்பிய வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது40). ஸ்டூடியோ உரிமையாளரான இவருக்கு திருச்சியிலிருந்து கடந்த 18-ந் தேதி மாலை பார்சல் வந்தது. பார்சலை பெற்ற வீரக்குமாரை அதனை பிரிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் நீடாமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட பார்சலை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் பார்சலில் பேட்டரி மின் இணைப்பில் வெடிக்க கூடிய ஜெலட்டீன் குச்சி1, 125 கிராம் எடை கொண்ட டெட்டனேட்டர் ஆகியவை இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த வெடி பொருட்கள் மிகப்பெரிய பாறைகளை பிளப்பதற்கும், பெரிய கட்டிடங்கள், வாகனங்களை தகர்க்கும் சக்தி வாய்ந்தது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் வீரக்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனக்கும் பார்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.
உடனே அந்த பார்சலில் உள்ள வெடி பொருட்களை எடுத்து பாதுகாப்பாக வைத்தனர். இந்த சம்பவம் நீடாமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 18-ந் தேதி இதைப்போல தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி மேலையூர் வடக்குத்தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் அறிவழகன் (28) என்பவருக்கும் பார்சலில் வெடி பொருட்கள் வந்தது. இது குறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையிலான தனிப்படை போலீசார் வெடிபொருட்கள் அனுப்பிய புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பூவாத்திரக்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் சத்திய மூர்த்தி(35), தஞ்சாவூர் அருளானந்த நகர் பகுதியை சேர்ந்த அமீர் சையது என்ற அமிர்தராஜ்(48) ஆகிய இருவரையும் கடந்த 26-ந் தேதி கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையிலான தனிப்படை போலீசார் தற்போது வெடிபொருளை பார்சலில் அனுப்பிய சென்னை தேனாம்பேட்டை முத்தையா தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சரவணன்(40) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story