ராயக்கோட்டை அருகே கன்டெய்னர் லாரியில் இருந்த ரூ.28 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


ராயக்கோட்டை அருகே கன்டெய்னர் லாரியில் இருந்த ரூ.28 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Sept 2020 6:30 PM IST (Updated: 30 Sept 2020 6:13 PM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே கேட்பாரற்று நின்ற கன்டெய்னர் லாரியில் இருந்த ரூ.28 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பிள்ளாரி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோனேரி அக்ரஹாரம் பக்கமுள்ளது காசிநாயக்கனம்பட்டி. இதன் அருகில் சிறிய மலை உள்ளது. அந்த மலையையொட்டி கன்டெய்னர் லாரி ஒன்று கேட்பாரற்று நின்று இருந்தது. இதுகுறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நேரு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று லாரியின் பின்புறம் கதவை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே தடை செய்யப்பட்ட 120 மூட்டைகள் புகையிலை பொருட்கள் மற்றும் பான் மசாலா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கன்டெய்னர் லாரியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு லாரியில் இருந்த புகையிலை மற்றும் பான்மசாலா குறித்து போலீசார் கணக்கிட்டனர். அப்போது, லாரியில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களையும், ரூ.12 லட்சம் மதிப்புள்ள கன்டெய்னர் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தலைமறைவான லாரியின் டிரைவர், வாகன உரிமையாளர் மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் அந்த புகையிலை பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது?, எதற்காக ராயக்கோட்டை அருகே மலைப்பகுதியில் நிறுத்தப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story