நிரம்பி வழியும் குடியாத்தம் மோர்தானா அணை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி


நிரம்பி வழியும் குடியாத்தம் மோர்தானா அணை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 Oct 2020 10:01 AM IST (Updated: 1 Oct 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை நேற்று நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான குடியாத்தம் மோர்தானா அணை கடந்த 2000-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த மோர்தானா அணை 465 மீட்டர் நீளம் கொண்டது. இதில் 398 மீட்டர் நீளத்திற்கு தண்ணீர் வழியும் பகுதியாக உள்ளது. இந்த அணையின் உயரம் 11.50 மீட்டராகும். 261 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையால் மோர்தானா அணை நிரம்பும். கடந்த 20 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே அணை நிரம்பியது. கடைசியாக 2017-ம் ஆண்டு மோர்தானா அணை நிரம்பியது. 2018-ம் ஆண்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணையில் தேக்கிவைக்கப்படும் தண்ணீர் திறந்து விடப்படும்போது குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயரும்.

வழிநெடுக உள்ள 19 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும், சுமார் 8 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மோர்தானா அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதலே சிறிது சிறிதாக உயரத்தொடங்கியது. எப்போதும் இல்லாத வகையில் இந்த வழக்கத்தைவிட முன்னதாகவே அணை நிரம்பிவிட்டது. நேற்று காலை 6 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் வழிய ஆரம்பித்தது. 7-வது முறையாக மோர்தானா அணை நிரம்பி உள்ளது.

இந்த ஆண்டு மோர்தானா அணை நீர், கால்வாய்கள் வழியாக சென்று அனைத்து ஏரிகளும் நிரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மோர்தானா அணை கால்வாய்களை தூர்வாரி, ஏரிகளுக்கு சீராக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார். நேற்று அணை முழு கொள்ளளவை எட்டி நீர் வழிய ஆரம்பித்ததும் ஏராளமானோர் அதனை காண குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளனர்.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் வேலூர் கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், குடியாத்தம் உதவி செயற்பொறியாளர் குணசீலன், உதவி பொறியாளர்கள் கோபி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் மோர்தானா அணைக்கு சென்று நீர் வழியும் பகுதியில் பூக்களை தூவி பூஜை செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய்த் துறையினரும் இந்த அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் மோர்தானா அணை திறந்து வைக்கப்பட்டது. அதே தேதியில் அணை நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது.

Next Story