முக்கொம்பு அருகே ரெயில் தண்டவாள பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார் - கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்


முக்கொம்பு அருகே ரெயில் தண்டவாள பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார் - கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Oct 2020 11:56 AM IST (Updated: 1 Oct 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

முக்கொம்பு அருகே ரெயில் தண்டவாள பகுதியில் மர்மமான முறையில் கொத்தனார் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

ஜீயபுரம்,

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்துள்ள பொய்யாமணி பகுதியை சேர்ந்த மூர்த்தி-தங்கவள்ளி தம்பதியின் மகன் விக்னேஸ்வரன் (வயது 25). கொத்தனாரான இவர், குளித்தலை அருகே நல்லூரை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மைனர் பெண்ணை திருமணம் செய்ததால் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் பிரித்து வைத்தனர். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் அந்த சிறுமி திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே உள்ள எலமனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இதுபற்றி அவர் விக்னேஸ்வரனிடம் கூறி, உங்களிடம் பேசவேண்டும். அதனால் எலமனூருக்கு வரும்படி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

இதனால் விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் எலமனூருக்கு புறப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை எலமனூர் ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் விக்னேஸ்வரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஆம்புலன்சில் ஏற்றினார்கள்.

அதற்குள் தகவல் அறிந்து அங்கு திரண்டு வந்த விக்னேஸ்வரனின் உறவினர்கள், விக்னேஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் எலமனூர் பஸ் நிலையத்தில் மரக்கட்டைகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதற்கிடையே விக்னேஸ்வரனின் உடல் தண்டவாளத்தின் அருகில் கிடந்தது என்பதால் ரெயில்வே போலீசார் விசாரிப்பதா? அல்லது கொலை செய்யப்பட்டார் என்று புகார் செய்வதால் ஜீயபுரம் போலீசார் விசாரிப்பதா? என்று போலீசார் இடையே குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையே திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கை ஜீயபுரம் போலீசார் விசாரிக்க அறிவுறுத்தியதன்பேரில், அவர்கள் விக்னேஸ்வரனின் உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து 7 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து விக்னேஸ்வரனின் தாய் ஜீயபுரம் போலீசில் கொடுத்த புகாரில், தனது மகனை அந்த சிறுமி எலமனூருக்கு வரவழைத்ததால் தான் நேற்று முன்தினம் அவன் இங்கு வந்ததாகவும், மறுநாள் (நேற்று) அவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும், இதுதொடர்பாக சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story