சிவகாசி அருகே, கோவிலில் சாமி சிலை திருட்டு - போலீசார் விசாரணை
சிவகாசி அருகே கோவிலில் சாமி சிலை திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே அவுசிங் போர்டு பகுதியில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி காலை 10 மணிக்கு கோவில் பூசாரி சங்கரநாராயணன் வழக்கமான பூஜைகளை முடித்து விட்டு சாப்பிட சென்றுள்ளார். பின்னர் 11 மணிக்கு வந்து பார்த்த போது கோவிலில் இருந்த சிவன்-பார்வதி பித்தளை சிலையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி சங்கர நாராயணன் இது குறித்து கோவில் நிர்வாகி வேல்சாமி என்பவருக்கு தகவல் அளித்தார். அவர் கோவிலுக்கு வந்து திருட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் இதுகுறித்து திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் திருட்டு நடைபெற்ற கோவிலுக்கு சென்றனர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை சரி பார்த்தனர்.
அப்போது கோவிலில் புகுந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் சாமி சிலையை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து அந்த நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜா ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார். திருட்டு போன சாமி சிலையின் புகைப்படத்தை கோவில் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர்.
அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் கோவிலில் புகுந்து சாமி சிலையை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story