உடற்பயிற்சி செய்யும் போது முககவசம் அணியக் கூடாது - இருதய சிகிச்சை டாக்டர் மாதவன் விளக்கம்
உடற்பயிற்சி செய்யும் போது முககவசம் அணிய வேண்டாம் என்று இருதய சிகிச்சை டாக்டர் மாதவன் விளக்கம் அளித்தார்.
மதுரை,
உலக இருதய தினத்தையொட்டி மதுரை ஹன்னா ஜோசப் மருத்துவமனையின் இருதய அறிவியல் துறை இயக்குனர் டாக்டர் மாதவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தற்போது கொரோனா கால கட்டம் என்பதால் பலர் ஆஸ்பத்திரியை நாடி வராமல் உயிர் இழந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இருதய பாதிப்பு இருந்தால் அவர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த கால கட்டத்தில் இருதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களின் ஆலோசனை பெற வேண்டும். கடந்த 6 மாதங்களாக இருதய நோயாளிகளை ஆய்வு செய்தபோது, சரியான நேரத்தில் மருத்துவமனையை அணுகாததால் பெரும் ஆபத்தையோ அல்லது உயிர் போகும் நிலையையோ அடைந்துள்ளனர்.
சி.டி.ஸ்கேன் எடுக்கும் போதே உங்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா அல்லது நோய் வந்து விட்டு சென்று விட்டதா என்பதை அறியமுடியும். அதன் மூலம் உங்களுக்கு எவ்விதமான சிகிச்சை அளிக்கலாம் என்று டாக்டர்கள் முடிவு செய்து கொள்ள முடியும். எனவே கொரோனா காலகட்டத்தில் நீங்கள் பயந்து கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டாம்.
முககவசம் அணிவதன் மூலம் நோய் தொற்றில் இருந்து காத்து கொள்ள முடியும். ஆனால் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது சமூக இடைவெளியை கடை பிடித்து முககவசம் அணிவதை தவிர்த்து பயிற்சி செய்வது நல்லது.
இதன் மூலம் அந்த நேரத்தில் இருதயத்திற்கு தேவையான சுவாசம் கிடைக்கும். இருதய நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் உணவுடன் காய்கறி, மஞ்சள், மிளகு, எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருந்ததால் பலருக்கு மன அழுத்தம் குறைந்துள்ளது. இதனால் மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் குறைந்ததாக ஆய்வில் தெரிய வருகிறது.
தற்போது உள்ள காலக்கட்டத்தில் மருத்துவ தொழில்நுட்பங்கள் முன்னேறி உள்ளதாலும், அதிநவீன சிகிச்சை முறைகளினாலும், குறைவான காயங்களுடன் நேர்த்தியாக அறுவை சிகிச்சையை கொரோனா காலகட்டத்திலும் டாக்டர்கள் செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் பயப்படாமல் இருதய பிரச்சினை ஏற்பட்டால் டாக்டரை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story