அரூர் காரப்பாடி மலைப்பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் மின்சார வசதிகள் - கலெக்டர் மலர்விழி தகவல்


அரூர் காரப்பாடி மலைப்பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் மின்சார வசதிகள் - கலெக்டர் மலர்விழி தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2020 5:30 PM IST (Updated: 1 Oct 2020 5:39 PM IST)
t-max-icont-min-icon

அரூர் காரப்பாடி மலைப்பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் மாநில அளவில் சுமார் 2 சதவீதம் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். சித்தேரி, சிட்லிங், எரிமலை, கோட்டுர்மலை, அலகட்டு, வத்தல்மலை, பிக்கிலிமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் அடிப்படை தேவைகளை மத்திய, மாநில அரசுகள் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. இந்த பகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்று சேர்வதற்கு தொடர்ந்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், அரூர் வட்டம் காரப்பாடி மலை கிராமத்திற்கு மின்சார வசதி செய்து தரக்கோரி தமிழக முதல்-அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் ரூ.31 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் 172 மின் கம்பங்கள் நடப்பட்டு 63 கிலோ வாட் மின் மாற்றி வசதியுடன் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின் பாதை காரப்பாடி மலை கிராமத்துக்கு அமைத்துத் தரப்பட்டுள்ளது. இதன்மூலம், காரப்பாடி மலைகிராமத்தின் ஒவ்வொரு இல்லங்களுக்கும், தெருவிளக்குகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மின் விளக்கு வசதியை தங்கள் கிராமத்தில் பார்த்திராத காரப்பாடி மலை கிராம மக்கள் இந்த நடவடிக்கையின் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, அகல் விளக்கு உள்ளிட்ட ஒளியில் படித்து வந்த இங்குள்ள மாணவ, மாணவிகள் தற்போது மின் விளக்கு வெளிச்சத்தில் இரவு நேரங்களில் பாடங்களை பயிலத் தொடங்கியுள்ளனர். இல்லத்தரசிகள் மின் விளக்கு வெளிச்சத்தில் சமையல் பணிகளை மேற்கொள்கின்றனர். வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் உதவியுடன் நாட்டு நடப்புகளை உடனுக்குடன் அறிந்து வருகின்றனர்.

இந்த மலை கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருமாறு பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் அப்பணிகள் நிறைவேற்றி தரப்படும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிட கறவை மாடுகள் வழங்குதல், சுய தொழில் தொடங்க வழிவகை செய்தல், சாதி சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்டவை உடனுக்குடன் நிறைவேற்றித்தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story