மாவட்டத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான குற்ற செயல்கள் மிக குறைவு - ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் பேட்டி
நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்ற செயல்கள் மிக குறைவு என தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார், ஆணையத்தின் துணைத்தலைவர் ஜவஹர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன் கலந்து கொண்டு கிறிஸ்தவ மகளிர் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவு சங்கங்கள், வருவாய் துறை, மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் மூலம் 22 நபர்களுக்கு ரூ.88 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களிடம் இருந்து குறைபாடுகள் தொடர்பாக மிக குறைவான மனுக்களே வந்து உள்ளன. இதற்காக மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன். மேலும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்ற செயல்களும் மிக, மிக குறைவு. அது தொடர்பாக எங்களுக்கு எந்த மனுவும் வரவில்லை. சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்குவதில் தேசிய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
டாம்கோ மூலம் கடந்த ஆண்டு ரூ.1 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ரூ.2 கோடியே 65 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் நிவாரணமாக உலமாக்கள் வாரியத்தில் பதிவு செய்த 62 பேருக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. 1,480 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு உள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான வழக்குகளையும் இவ்வாணையம் கவனித்து வருகிறது. குறிப்பாக சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விஷயத்தில் கூட ஆணையம் தலையிட்டு உரிய விளக்கம் கேட்கப்பட்டு, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த சம்பவத்தில் சுதந்திரமான விசாரணை நடைபெற ஆணையம் உன்னிப்பாக கவனிக்கிறது. சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை சரியாக சென்று கொண்டு இருக்கிறது. சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான வழக்குகள் இருந்தால் உடனுக்குடன் அதன் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story