காணொலிக்காட்சி மூலம் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இருந்து ‘கூகுள் மீட்‘ காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாகவும், நோய்த்தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகவும், விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களை கூகுள் மீட் எனப்படும் காணொலிக்காட்சி மூலமாக சந்திக்கிறேன். இந்த சந்திப்பு தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு, தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
விவசாயிகளும் இந்த நோய்த்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கூட்டமாக கூடுவதை முற்றிலும் தவிர்த்து, நோய்த்தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் நலன் காக்க முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 440.60 மி.மீ மழை பதிவாகும். இந்த ஆண்டு (2020) தென்மேற்குப்பருவமழை காலத்தில் 597.40 மி.மீ. மழை கிடைத்துள்ளது. சராசரியை விட இந்தாண்டு 156.80 மி.மீ மழை அதிகமாக கிடைத்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சேலம் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 370.50 மி.மீ ஆகும். இக்காலத்திலும் அதிக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு மழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால் மழைநீர் வீணாகாமல் தடுப்பதற்கு ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் தூர்வாரி கரைகள் செம்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. வரத்து வாய்க்கால்கள் சீர்செய்யப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தி வரத்து வாய்க்கால்கள் சீர் செய்வதற்கும், பாசன வாய்க்கால்களை பராமரிப்பதற்கும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.27.85 கோடி மதிப்பீட்டில் 127 குடிமராமத்து பணிகள் எடுக்கப்பட்டு 99 குடிமராமத்துப்பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள 28 குடிமராமத்துப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. தற்போது சேலம் மாவட்டத்தில் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் விவசாயப்பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. கிடைக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் சேமிப்புக்கு வழிவகுப்பதோடு குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்வதற்கு ஏற்றவாறு சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசன திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் படி சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் ராமன் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story