திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி நடிகர், நடிகைகளுக்கு மகிழ்ச்சியான விஷயம் மைசூருவில் சிவராஜ்குமார் பேட்டி


திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி நடிகர், நடிகைகளுக்கு மகிழ்ச்சியான விஷயம் மைசூருவில் சிவராஜ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 2 Oct 2020 3:19 AM IST (Updated: 2 Oct 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நடிகர், நடிகைகள் மற்றும் திரை உலகினருக்கு மகிழ்ச்சியான விஷயம் என்று மைசூருவில் நடிகர் சிவராஜ்குமார் கூறினார்.

மைசூரு,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

திரையரங்குகள் மூடப்பட்டதால் ஏராளமான திரைப்படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. சில திரைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இதன்காரணமாக நாடு முழுவதும் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு ஏதும் இன்றி தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். தற்போது படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதால் நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் சிவராஜ்குமார்

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவி, மகள், மருமகன் மற்றும் குடும்பத்தினருடன் மைசூருவில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு வந்தார். பின்னர் மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் வனவிலங்குகளை அவர் பார்த்தார். குறிப்பாக மிருகக்காட்சி சாலையில் தனது தாயின் பெயர் சூட்டப்பட்ட பர்வதம்மாள் யானையை அவர் பாசத்துடன் தழுவினார். மேலும் அதன் உடல்நலம், ஆரோக்கியம் குறித்து பராமரிப்பாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது நடிகர், நடிகைகளுக்கு மட்டுமின்றி திரை உலகினருக்கு கிடைத்த மகிழ்ச்சியான விஷயம். பொதுமக்கள் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க வரும்போது அரசின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அரசு உத்தரவுகளுக்கு மதிப்பளித்து ஒத்துழைப்பு தர வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரசிகர்கள் திரண்டனர்

முன்னதாக நடிகர் சிவராஜ்குமார், மிருகக்காட்சி சாலைக்கு வந்திருப்பது குறித்து அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அவரை பார்ப்பதற்காக மிருகக்காட்சி சாலை முன்பு திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து நடிகர் சிவராஜ்குமார் வணக்கம் செலுத்தினார். அப்போது அவர்கள் நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

Next Story