தசரா விழாவில் பங்கேற்க 5 யானைகள் மைசூருவுக்கு கஜபயணம்


தசரா விழாவில் பங்கேற்க 5 யானைகள் மைசூருவுக்கு கஜபயணம்
x
தினத்தந்தி 2 Oct 2020 3:22 AM IST (Updated: 2 Oct 2020 3:22 AM IST)
t-max-icont-min-icon

தசரா விழாவில் கலந்துகொள்ள 5 யானைகள் நேற்று கஜபயணமாக மைசூருவுக்கு அழைத்துவரப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) அந்த யானைகள் பாரம்பரிய முறைப்படி அரண்மனைக்கு அழைத்துவரப்படுகிறது.

மைசூரு,

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இறுதிநாளான விஜயதசமி அன்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த ஆண்டு தசரா விழா வருகிற 17-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக தசரா விழா எளிமையாக நடத்தப்படுகிறது. இதனால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், மகளிர், விவசாயிகள், சிறுவர்கள் உள்ளிட்ட தசரா விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு, அரண்மனை வளாகத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த ஊர்வலத்தில் 5 யானைகள் கலந்துகொள்கின்றன. இந்த விழாவில் கலந்துகொள்ளும் தசரா யானைகள் மைசூரு அழைத்துவரப்பட்டு, பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். தசரா யானைகள் மைசூருவுக்கு அழைத்துவரப்படும் நிகழ்வு, கஜபயணம் என அழைக்கப்படுகிறது.

5 யானைகள் கஜபயணம்

இந்த நிலையில் நடப்பு ஆண்டு தசரா விழாவில் கலந்துகொள்ள 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து செல்லும் அபிமன்யு, விக்ரம், கோபி, விஜயா, காவேரி ஆகிய யானைகள் தேர்வாகி உள்ளன. இந்த யானைகள் நேற்று மைசூருவுக்கு கஜபயணத்தை தொடங்கியது.

அதாவது மைசூரு மாவட்டம் உன்சூர் அருகே நாகரஒலே வனப்பகுதிக்கு உட்பட்ட வீரன்னஒசஹள்ளியில் இருந்து 5 யானைகளும் குளிப்பாட்டி, நெற்றிபட்டை சூட்டி அலங்கரித்து அணிவகுத்து நின்றன. அதற்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து மைசூருவுக்கு தனித்தனி லாரிகளில் அனுப்பி வைத்தனர். இந்த கஜபயணத்தை மைசூரு கலெக்டர் ரோகிணி சிந்தூரி தொடங்கிவைத்தார். எப்போதும் கலைநிகழ்ச்சிகள், மேளதாளங்கள் முழங்க நடைபெறும் கஜபயண தொடக்க விழா தற்போது கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்தது. இதில் வனத்துறை அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அரண்மனைக்கு அழைத்து வருகை

இந்த யானைகள் நேற்று மாலை மைசூரு டவுன் அசோகபுரத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தை வந்தடைந்தது. அங்கு இரவில் அந்த யானைகள் தங்கி ஓய்வெடுத்தன. இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணி அளவில் அந்த 5 யானைகளும் அலங்கரித்து ஊர்வலமாக மைசூரு அரண்மனைக்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுகிறது. அரண்மனையின் பிரதான வாயில் முன்பு அந்த யானைகளுக்கு அரண்மனையின் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து மன்னர் குடும்ப பாரம்பரியபடி உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், நாகேந்திரா, ஜி.டி.தேவேகவுடா, கலெக்டர் ரோகிணி சிந்தூரி, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பாரதி, மைசூரு மாவட்ட வனத்துறை அதிகாரி அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

அரண்மனையில் ஏற்பாடுகள் தீவிரம்

இதற்கிடையே தசரா விழா தொடங்க இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருப்பதால் மைசூரு அரண்மனையில் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. அரண்மனை கட்டிடங்களை புதுப்பிக்கும் பணியும், அரண்மனை வளாகத்தில் உள்ள பூந்தோட்டங்களை அழகுப்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதுபோல் அரண்மனை வளாகத்தில் யானைகள் தங்குவதற்காக கூடாரமும், யானைகளின் பாகன்கள், குடும்பத்தினர் தங்குவதற்கும் கூடாரம் அமைக்கும் பணியும் நேற்று நடந்தது. தசரா யானைகள் மைசூருவுக்கு வந்துள்ள நிலையில் தசரா விழா ஏற்பாடுகள் களைக்கட்ட தொடங்கியுள்ளது.

Next Story