போராட்ட களமாக மாறிய புதுச்சேரி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், முற்றுகை


போராட்ட களமாக மாறிய புதுச்சேரி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், முற்றுகை
x
தினத்தந்தி 2 Oct 2020 4:12 AM IST (Updated: 2 Oct 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நாளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், முற்றுகை நடைபெற்றதால் புதுச்சேரி போராட்டக்களமாக மாறியது.

புதுச்சேரி,

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் புதுவையில் தினமும் பஞ்சமில்லாமல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8 இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு:-

ஜனநாயக வாலிபர் சங்கம்

ஏ.எப்.டி., சுதேசி, பாரதி ஆகிய பஞ்சாலைகள் மூடப்பட்டதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சுதேசி மில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாலிபர் சங்க பிரதேச தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். பொருளாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். செயலாளர் சரவணன், சுதேசி பஞ்சாலை தொழிற்சங்க தலைவர் ஜெயதோர், வாலிபர் சங்க நகரக்குழு தலைவர் ரஞ்சித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டத்தை எதிர்த்து புதுவை யூனியன் பிரதேச தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாடுகள், நெற்கதிர்களுடன் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாநில துணை தலைவர் பாஸ்கர், கவுரவ தலைவர்கள் ஆனந்தன், சீனுவாச பெருமாள், இளைஞரணி தலைவர் கபிரியேல், பொருளாளர் சதீஷ், நகர துணை செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சண்டே மார்க்கெட் வியாபாரிகள்

சண்டே மார்க்கெட்டில் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரி ஏ.ஐ.டி.யு.சி. சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மிஷன் வீதி மாதா கோவில் எதிரில் நேற்று முன்தினம் முதல் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது.

அப்போது வியாபாரிகள் சாலையோரம் கடைகளை விரித்து வியாபாரம் செய்வதுபோல் துணிகள், காலணிகளை வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தி னர். இதில் வியாபாரிகள் சங்க தலைவர் பாபு, ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேது செல்வம் மற்றும் சண்டே மார்க்கெட் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

பி.ஆர்.டி.சி.

புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி பி.ஆர்.டி.சி. ஊழியர் சம்மேளத்தினர் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நிர்வாக மேலாளர் ராதா கிருஷ்ணன் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு பொதுச்செயலாளர் வேலையன் தலைமை தாங்கினார். தலைவர் பத்மநாபன், அருணகிரி உள்பட 60-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்தும், மேல்முறையீடு செய்யக்கோரியும் அண்ணா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் சகாபுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் நூர்முகமது, மனித நேய மக்கள் கட்சி செயலாளர் மன்சூர், பொருளாளர் சேக் தாவூத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் புதுச்சேரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 அடி ரோட்டில் உள்ள வங்கி முன்பு உண்ணாவிரதமும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் நிலுவை சம்பளம் வழங்கக்கோரி கல்வித்துறை அலுவலகத்தில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டும், ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story