ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சர்வதேச மலர் ஏல மையம் - கலெக்டர் நேரில் ஆய்வு


ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சர்வதேச மலர் ஏல மையம் - கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 2 Oct 2020 5:24 AM GMT (Updated: 2 Oct 2020 5:24 AM GMT)

ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சர்வதேச மலர் ஏல மையத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உழவர் சந்தை அருகே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் மலர் வணிக வளாகம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ஓசூர் அருகே தேவகானபள்ளி கிராமத்தில் 50 சதவீத மானியத்தில் பசுமைக்குடில் அமைத்து ரோஜா சாகுபடி மற்றும் மலர் குளிரூட்டும் மையத்தை கலெக்டர் பார்வையிட்டு, மலர் ஏற்றுமதி குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, 7.67 ஏக்கரில், ரூ.20.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் ஓசூர் சர்வதேச மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். தற்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து சூளகிரி அருகே கானலட்டி பகுதியில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், பயனாளியின் வங்கி கணக்கில் பணம் வரப்பெற்றுள்ளதா? என்பதை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அட்டகுறுக்கி ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் சிறு குறு விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் இலவசமாக 1 ஹெக்டேருக்கு ரூ.1.13 லட்சம், 5 ஏக்கருக்குள்ளாக உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.84 ஆயிரம் வழங்கி, நுண்ணுயிர் சொட்டுநீர் பாசனம் அமைத்து தக்காளி பயிரிடப்பட்டிருப்பதையும் அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மோகன்ராம், துணை இயக்குனர் ராம்பிரசாத், வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், பாலாஜி, மாவட்ட தோட்டக்கலை அமைப்பின் தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான வெங்கடாசலம் என்ற பாபு, ஒப்பந்ததாரர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story