சக்லேஷ்புரா அருகே தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை கண்ணீர்; சாப்பிட மறுத்து வருவதால் வனத்துறையினர் கவலை
சக்லேஷ்புரா அருகே தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை சாப்பிட மறுத்து கண்ணீர்விட்டு வருகிறது. இதனால் வனத்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
பெங்களூரு,
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே மலளி கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி இந்த கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சில காட்டு யானைகள் இந்த கிராமத்தை ஒட்டிய காபி தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு பயிரிட்டு இருந்த காபி செடிகளை தின்றும், பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்தியது.
பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு கர்ப்பிணி யானை இருந்தது. அந்த யானை திடீரென்று குட்டியை ஈன்றது. அந்த சமயத்தில் குட்டி யானையின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த குட்டி யானை எழுந்து நிற்க முடியாமல் படுத்தே கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சக்லேஷ்புரா வனத்துறையினர் அந்த குட்டி யானையை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். ஆனால் குட்டி யானை அருகில் தாய் யானை நின்றபடி இருந்தது. இதையடுத்து தாய் உள்ளிட்ட மற்ற யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். பின்னர் காயத்துடன் உயிருக்கு போராடிய குட்டி யானையை மீட்டு சக்லேஷ்புரா வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு வைத்து அந்த குட்டி யானைக்கு கால்நடை மருத்துவர் உதவியுடன் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனால் தாயை பிரிந்த குட்டி யானை, இலை, தழைகளை சாப்பிட மறுத்து வருவதுடன் கண்ணீர்விட்டு பரிதவித்தபடி சோகமாக இருந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். பிறந்த 4 நாளில் தாயை பிரிந்த குட்டி யானை கண்ணீர் விடும் காட்சி காண்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
Related Tags :
Next Story