பாபநாசத்தில், காந்தி பிறந்த நாளையொட்டி நேர்மையை கடைபிடிக்க வலியுறுத்தி ஆளில்லா கடை திறப்பு


பாபநாசத்தில், காந்தி பிறந்த நாளையொட்டி நேர்மையை கடைபிடிக்க வலியுறுத்தி ஆளில்லா கடை திறப்பு
x
தினத்தந்தி 3 Oct 2020 10:17 AM IST (Updated: 3 Oct 2020 10:17 AM IST)
t-max-icont-min-icon

காந்தி பிறந்த நாளையொட்டி நேர்மையை கடைபிடிக்க வலியுறுத்தி பாபநாசத்தில் ஆளில்லா கடை திறக்கப்பட்டது.

பாபநாசம்,

நேர்மை, எளிமை, உண்மை ஆகியவற்றை சுய கொள்கையாக பின்பற்றி வாழ்ந்தவர் காந்தியடிகள். தேசப்பிதா என்று அன்புடன் அழைக்கப்படும் காந்தி, இந்தியா நம்பிக்கை, நாணயம் நிறைந்த நாடாக திகழ வேண்டும் என விரும்பினார். சுதந்திர போராட்டத்தின்போது அவருடைய செயல்பாடுகளும் அப்படியே அமைந்தன.

காந்தியின் நேர்மை கொள்கையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஆண்டுதோறும் காந்தி பிறந்தநாளில் ஆளில்லா கடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 21-வது ஆண்டாக பாபநாசம் பஸ் நிறுத்தத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆளில்லா கடை திறக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூராட்சி செயல் அதிகாரி கார்த்திகேயன் கலந்து கொண்டு ஆளில்லா கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் பொன்.சுப்பிரமணியன், செயலாளர் ஜெயக்குமார், மண்டல துணை ஆளுனர் காதர்பாட்சா, மக்கள் தொடர்பு நிர்வாக தலைவர் அறிவழகன், சாசன தலைவர் அமீர்ஜான், நிர்வாகிகள் சரவணன், ஜெயசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விற்பனையாளர் இல்லாத அந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள், எழுதுபொருட்கள், திண்பண்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. பொருட்களின் விலை அதன் மீது ஒட்டப்பட்டிருந்தது.

அதன் அருகே ஒரு டப்பா வைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்ட மக்கள் அதற்கான தொகையை அந்த டப்பாவில் போட்டு சென்றனர். மீதி தொகையை அதில் இருந்தே எடுத்து சென்றனர்.

இது வாடிக்கையாளர்களின் நேர்மையை சோதிக்கும் விதத்தில் இருந்தது. இதுகுறித்து ரோட்டரி சங்க செயலாளர் ஜெயக்குமார் கூறியதாவது:- நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது காந்தியின் கனவு. அவர் கண்ட கனவினை நினைவாக்க பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி பிறந்த நாளில் நேர்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டது.

21 ஆண்டாக பாபநாசத்தில் இந்த ஆளில்லா கடை திறக்கப்பட்டு வருகிறது. இந்த கடை பொதுமக்களை நேர்மையை கடைபிடிக்க தூண்டும். ஆளில்லா கடை ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இந்த கடை மூலம் கிடைக்கும் வருவாய் மக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story