கிராம பஞ்சாயத்துக்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் தலைமையில் கிராம மக்கள் கூட்டம் வேளாண் சட்டதிருத்த பாதிப்பு குறித்து விளக்கம்


கிராம பஞ்சாயத்துக்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் தலைமையில் கிராம மக்கள் கூட்டம் வேளாண் சட்டதிருத்த பாதிப்பு குறித்து விளக்கம்
x
தினத்தந்தி 3 Oct 2020 10:58 AM IST (Updated: 3 Oct 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், யூனியன் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நடந்த கிராம மக்கள் கூட்டத்தில் வேளாண் சட்ட திருத்தங்களின் பாதிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு, கிராம மக்களின் குறைகளும் கேட்டறியப்பட்டது.

விருதுநகர்,

வழக்கமாக காந்தி ஜெயந்திதினமான நேற்று பஞ்சாயத்து ராஜ்விதிகளின்படி கிராம சபை கூட்டம் நடைபெறுவது உண்டு. தமிழக அரசு கிராம சபை கூட்டம் நடைபெறும் எனஅறிவித்ததோடு, இக்கூட்டத்தில் கிராம வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதால் கிராமமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து நேற்று முன்தினம் தமிழக அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்டநிர்வாகமும் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து தி.மு.க. தலைமை அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராம மக்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டு வேளாண் சட்ட திருத்த பாதிப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறும் கிராம மக்களிடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டறியுமாறும் அறிவுறுத்தியது. அதன் பேரில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞசாயத்துக்களிலும் கிராம மக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் கோபாலபுரம், பாலையம்பட்டி, உடையநாதபுரம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களில் நடந்த கிராம மக்கள்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவருடன் அக்கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளும், தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மத்தியஅரசின் வேளாண் சட்ட திருத்தத்தால் விவசாயிகளுக்கு மட்டும் இன்றி சாமானிய மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து அவர் விளக்கி கூறியதோடு, கிராம மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்

விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சங்கரலிங்காபுரம், வச்சக்காரப்பட்டி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களில் நடந்த கிராமமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதுடன், கிராம மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தளவாய்புரம் பகுதியில் உள்ள கிராமங்களில் நடந்த மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

திருச்சுழி தொகுதிஎம்.எல்.ஏ.வும், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கம் தென்னரசு நேற்று காலை சென்னையில் இருந்த நிலையில் மாலை திருச்சுழி தொகுதியில் உள்ள கல்குறிச்சி, புதுப்பட்டி கிராமங்களில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டார். இதே போன்று தி.மு.க. யூனியன் தலைவர்களும், கவுன்சிலர்களும்,தி.மு.க. சார்பு பஞ்சாயத்து தலைவர்களும் தி.மு.க. நிர்வாகிகளும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நடந்த கிராம பஞ்சாயத்துக்களின் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டனர்.


Next Story