காணாமல்போன ஊரணியை கண்டுபிடிக்க கோரி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 4 பேர் கைது


காணாமல்போன ஊரணியை கண்டுபிடிக்க கோரி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2020 11:26 AM IST (Updated: 3 Oct 2020 11:26 AM IST)
t-max-icont-min-icon

காணாமல் போன ஊரணியை கண்டுபிடித்து தரக்கோரி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணன் (வயது 55). இவர் மற்றும் இவரது தாயார் வெள்ளையம்மள் (78) , இவரது சகோதரிகள் முத்துலெட்சுமி (46) , சித்ரா (44) ஆகியோர் நேற்று காலை கொத்தமங்கலம் வாடிமாநர் கடைவீதியில் உள்ள ரவுண்டானா அருகே தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறி அமர முயன்றனர்.

அப்போது அங்கு வந்த கீரமங்கலம் போலீசார் உண்ணாவிரதம் இருப்பதற்கான காரணம் கேட்டனர். அதற்கு, ‘எங்கள் பகுதியில் இருந்த வீரப்பெருமாள் ஊரணியை காணவில்லை, கண்டுபிடித்துதர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம் இருக்க போகிறோம்’ என்றனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என்று கூறிய போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தை தொடருவோம் என்று போலீஸ் நிலையத்திலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜ் உண்ணாவிரதம் இருக்க முயன்ற முத்துக்கண்ணணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து சில நாட்களில் கோரிக்கையை நிறைவேற்ற வருவாய் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதனால் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதனையடுத்து மாலையில் உண்ணாவிரதப் போராட்டம் முடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கொத்தமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story