மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேட்டி


மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 4 Oct 2020 4:15 AM IST (Updated: 3 Oct 2020 11:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் எம்.எல்.ஏ.அலுவலகம் அருகே செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் நிறுவன உதவியுடன் ரூ.6 லட்சம் செலவில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து, சிக்னல் செயல்பட்டினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பொது மக்களுக்கு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முககவசம், கபசுர குடிநீர் மற்றும் ஆரோக்கிய பான பொடி ஆகியவற்றையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர்கள் சுதேசன் (கிழக்கு), அய்யப்பன் (மேற்கு), பத்மாவதி (அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்), போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், தொழில் அதிபர் கணேஷ்பாபு, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திருமுருகன், வெங்கேடஸ்வரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவில்பட்டி நகரில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கண்காணிப்பு கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நகர்ப்புறம் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகர் பகுதியில் உள்ள அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கோவில்பட்டியில் போலீஸ் சரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீஸ் பற்றாக்குறையை குறித்து கண்டறிந்து, கூடுதலாக ஆயதப்படை போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டியில் போக்குரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்க பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story