ஏரல் அருகே, மூதாட்டி வீட்டில் நகை திருடிய கொத்தனார் கைது - மண்ணில் புதைத்து வைத்து இருந்த 13 பவுன் மீட்பு
ஏரல் அருகே மூதாட்டி வீட்டில் நகை திருடிய கொத்தனார் கைது செய்யப்பட்டார். மண்ணில் புதைத்து வைத்து இருந்த 13 பவுன் மீட்கப்பட்டது.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள இடையர்காடு ஊரைச் சேர்ந்தவர் செல்வராஜ் நாடார் மனைவி பிச்சம்மாள் (வயது 70). இவர் இடையர்காடு வேதக்கோயில் தெருவில் தனியாக வசித்து வருகிறார். கடந்த மே மாதம் பிச்சம்மாள் வீட்டில் புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை திருடிச் சென்றார். இதுகுறித்து ஏரல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் வில்லியம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் போலீசை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். அவரை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது, அவர் இடைக்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்த கொத்தனாரான ராமஜெயம் (37) என்பதும், பிச்சம்மாள் வீட்டில் நகை திருடியவர் என்பதும் தெரியவந்தது. மேலும் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் விசாரணை செய்ததில் பிச்சம்மாள் வீட்டில் திருடிய நகைகளை ராமஜெயம் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் மண்ணுக்குள் புதைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த இடத்திற்கு சென்று தோண்டி மஞ்சள் பையில் வைத்திருந்த 13 பவுன் நகைகளை மீட்டனர். தொடர்ந்து ராமஜெயத்தை கைது செய்தனர்.
நேற்று மாலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஏரல் போலீஸ் நிலையத்திற்கு வருகை தந்து குற்றவாளியை கண்டுபிடித்து நகைகளையும் மீட்ட போலீசாரை வெகுவாக பாராட்டினார்.
Related Tags :
Next Story