நெல்லையில், மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 87 வழக்குகளுக்கு தீர்வு
நெல்லையில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நெல்லை,
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நுண்ணிய அளவில் மக்கள் நீதிமன்றங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நெல்லை கோர்ட்டில் ‘லோக் அதாலத்‘ எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று காலை தொடங்கியது. அதனை மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான நசீர் அகமது தொடங்கி வைத்தார்.
கூடுதல் சார்பு நீதிபதி கிறிஸ்டல் பபிதா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான வஷீத்குமார், உரிமையியல் நீதிபதி கெங்கராஜ், நீதிபதி பாபு, ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பூவலிங்கம், நெல்லை வக்கீல் சங்க தலைவர் சிவ சூரியநாராயணன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீதிபதி கிறிஸ்டல் பபிதா தலைமையில், ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பூவலிங்கம் உறுப்பினராக கொண்ட ஒரு அமர்வும், நீதிபதி கெங்கராஜ் தலைமையில், நீதிபதி பாபு உறுப்பினராக கொண்ட ஒரு அமர்வும் என மொத்தம் 2 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதேபோல் தென்காசியில் கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமார் தலைமையில் சார்பு நீதிபதி காமராஜ் உறுப்பினராக கொண்ட ஒரு அமர்வும், கூடுதல் சார்பு நீதிபதி ரஸ்கின் ராஜ் தலைமையில் நீதிபதி பிரகதீஸ்வரன் உறுப்பினராக கொண்ட ஒரு அமர்வும் அமைக்கப்பட்டிருந்தது.
நெல்லை, தென்காசி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 182 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் நேற்று ஒரே நாளில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் ரூ.2 கோடி 47 லட்சத்து 21 ஆயிரத்து 473 வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் நீதிமன்றத்தில் வக்கீல்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வஷீத்குமார் செய்திருந்தார்.
Related Tags :
Next Story