பெலகாவி அருகே கார்-சரக்கு ஆட்டோ மோதல்: பெண்கள் உள்பட 7 பேர் நசுங்கி சாவு - வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது சோகம்
பெலகாவி அருகே, கார் -சரக்கு ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
பெலகாவி,
பெலகாவி மாவட்டம் சவதத்தி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த காரும், சரக்கு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவும், காரும் அப்பளம் போல நொறுங்கின. மேலும் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சவதத்தி போலீசார் அங்கு சென்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு ஆட்டோ, காரின் இடிபாடுகள் இடையே சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் உடல் நசுங்கி இறந்திருந்தது தெரியவந்தது. மேலும் 30 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். 30 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சவதத்தி, உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே விபத்தில் பலியான 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் கார் டிரைவர் தமன்னா பூஜாரி (வயது 31), சரக்கு ஆட்டோவில் வந்த மாதமாவா (50), பீமவ்வா (38), எல்லவ்வா (60), பரவ்வா (35), ருகமவ்வா (30), எல்லம்மா (60) என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை. விபத்தில் இறந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்கள் என 36 பேரும் ராமதுர்கா தாலுகா சிஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் உப்பள்ளி தாலுகா மொரபா கிராமத்தில் வேலை செய்து விட்டு வீடு திரும்பி வந்தபோது விபத்து நடந்ததும், இதில் 6 பேர் இறந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து சவதத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பெண்கள் உட்பட 7 பேர் இறந்த சம்பவம் சவதத்தியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story