ராகுல்காந்தி கைதை கண்டித்து குமரியில் காங்கிரசார் 3-வது நாளாக மறியல்-ஆர்ப்பாட்டம் - 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 69 பேர் கைது


ராகுல்காந்தி கைதை கண்டித்து குமரியில் காங்கிரசார் 3-வது நாளாக மறியல்-ஆர்ப்பாட்டம் - 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 69 பேர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2020 3:45 AM IST (Updated: 4 Oct 2020 5:36 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து குமரியில் காங்கிரசார் 3-வது நாளாக மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குலசேகரத்தில் மறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 69 பேரை போலீசார் கைது செய்தனர்.

குலசேகரம், 

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக காங்கிரசார் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் குலசேகரம் நாகக்கோடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் தலைமை தாங்கினார். திருவட்டார் கிழக்கு வட்டார தலைவர் ஜெகன்ராஜ் முன்னிலை வகித்தார். கிள்ளியூர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குளச்சல் பிரின்ஸ் எம்.எல்.ஏ., ரெத்தினகுமார், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் செலின்மேரி, மோகன்தாஸ், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தக்கலை போலீஸ் துணைசூப்பிரண்டு ராமச்சந்திரன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென குலசேகரம்- மார்த்தாண்டம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உள்பட 69 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது திடீரென உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உருவ பொம்மை எரித்து கோஷம் எழுப்பினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உருவபொம்மை தண்ணீர் விட்டு அணைத்தனர். பின்னர் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

இதேபோல் திருத்துவபுரத்திலும் மகிளா காங்கிரசாரும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். சிதறால் சந்திப்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story