குமரியில் மண் தட்டுப்பாடு; செங்கல்சூளை தொழில் முடங்கியது - ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்


குமரியில் மண் தட்டுப்பாடு; செங்கல்சூளை தொழில் முடங்கியது - ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
x
தினத்தந்தி 4 Oct 2020 3:45 AM IST (Updated: 4 Oct 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழ வைக்கும் செங்கல் சூளை தொழில், மண் தட்டுப்பாட்டால் முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் உயிர்நாடியாக விளங்குவது செங்கல் சூளை தொழிலாகும். இத்தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகிறார்கள். தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், ராஜாவூர், தாழக்குடி, சந்தை விளை, துவரங்காடு, நாவல்காடு, ஞாலம், இறச்சகுளம், நிலப்பாறை, மகராஜபுரம், மார்த்தால், தெள்ளாந்தி, ஞானதாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிலில் உள்ளூர் மக்களுடன் வெளி மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள். செங்கல்சூளை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருள் மண் தான். இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் உள்ளூர் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களுக்கும், ஏன் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் செங்கல் சூளைக்கு தேவையான மண் அரசு குளத்தில் இருந்து இலவசமாக எடுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அது தடை செய்யப்பட்டு, பின்னர் தனியார் பட்டா நிலங்களில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியது. மேலும் குளம் தூர்வாரும் போது அதில் உள்ள மண்ணையும் செங்கல் சூளைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியது. தற்போது ஒரு வருடமாக மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தி விட்டது.

இதனால் செங்கல் சூளை நடத்துபவர்கள் அண்டை மாவட்டமான பழவூரில் இருந்து விலைக்கு மண் வாங்கி வந்தனர். அதுவும் தடை செய்யப்பட்டு விட்டது. எனவே, செங்கல் சூளை நடத்துபவர்கள் மண் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால் சிலர் செங்கல் சூளை தொழிலை நடத்தாமல் விட்டு விட்டனர். சிலர் ஏற்கனவே இருக்கும் மண் மூலம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலை நீடித்தால் செங்கல் சூளை தொழில் முடங்கும் அபாயம் இருக்கிறது. எனவே பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் செங்கல் சூளை தொழில் தொடர்ந்து நடைபெற வேண்டுமானால், தட்டுப்பாடு இல்லாமல் மண் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்களும், உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக குமரி மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜேக்கப் மனோகரன் கூறுகையில், நாங்கள் இந்த செங்கல் உற்பத்தி தொழிலை சுயசார்பு தொழிலாக நடத்தி வருகிறோம். கொரோனா ஊரடங்கின் போது பல மாதமாக தொழில் செய்ய முடியாமல் தவித்தோம். அப்போது அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கியது. இது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில், மாவட்டத்தில் மண் எடுக்க ஒரு வருடத்திற்கு மேலாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் செங்கல் உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்தது.

அண்டை மாவட்டத்தில் இருந்து மண்ணை விலைக்கு வாங்கி தொழிலை நடத்தி வருவதால், உற்பத்தி செலவு அதிகமானது. தொழில் போட்டியால் நஷ்டம் அடைந்து வந்தோம். தற்போது அந்த அனுமதியும் ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டதால், தொழிலை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை நீடித்தால் உற்பத்தியாளர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என வேதனையுடன் தெரிவித்தார்.

பாலாஜி நகரில் செங்கல் சூளை நடத்தி வரும் அஸ்வின் என்பவர் கூறுகையில், நான் அந்த பகுதியில் 3 வருடமாக செங்கல் சூளை நடத்தி வருகிறேன். ஏற்கனவே பல மாதமாக ஊரடங்கு காரணமாக செங்கல் சூளை தொழில் நடத்த முடியாமல் போயிற்று. இப்போது செங்கல் சூளை நடத்த பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளேன். ஆனால் செங்கல் சூளைக்கு தேவையான மண் கிடைக்காமல், தொழிலுக்கு பெரிய பிரச்சினை உருவாகி உள்ளது.

ஏற்கனவே செங்கல் சூளையில் ஒரு வாரம் வேலைக்கு தான் மண் உள்ளது. அதுவும் தீர்ந்த பிறகு என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை. எனவே நாங்கள் தொடர்ந்து செங்கல் சூளை நடத்திட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வில்லவிளையை சேர்ந்த தொழிலாளி செல்லத்துரை கூறுகையில், நான் 20 ஆண்டாக செங்கல் சூளை தொழிலாளியாகவும், லோடுமேனாகவும் வேலை பார்த்து வருகிறேன். இந்த தொழிலை நம்பி தான் வாழ்க்கையை கழித்து வருகிறேன். மண் தட்டுப்பாட்டால் பல செங்கல் சூளைகள் செயல்படாமல் உள்ளது.

இந்த நிலை நீடித்தால் மொத்த செங்கல்சூளை தொழிலும் முடங்கும் அபாயம் இருக்கிறது. என்னை போன்ற பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Next Story