புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 Oct 2020 12:38 AM GMT (Updated: 4 Oct 2020 12:38 AM GMT)

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

போடி (மீனாட்சிபுரம்),

போடி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதையொட்டி அதிகாலையில் சுப்ரபாத இன்னிசையுடன் பெருமாளுக்கு திருமஞ்சனம், பால், நெய், தேன், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய சீனிவாச பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது. பெருமாளுக்கு ஆளுயரத்தில் ஏலக்காய் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, ரங்கநாதா என்று கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சுரேஷ், பட்டாச்சாரியார்கள் கார்த்திக், குமரேசன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு பக்தர்கள் கலந்து கொண்டனர். போடி போலீசார் பக்தர்களை ஒழுங்கு படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

கூடலூரில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய பகுதியில் அமைந்து உள்ள கூத்தப்பெருமாள் கோவிலில் சாமிக்கு திருமஞ்சனம், பால், தேன். நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பலவகையான வண்ண மலர்களால் கூத்தபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கூடலூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள கோவில் வரை பக்தர்களை அழைத்து வர டிராக்டர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் உற்சவருக்கு திருவேங்கடமுடையான் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

இதுபோல தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story