கடன் வழங்கிய நுண்நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி தெற்கு தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


கடன் வழங்கிய நுண்நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி தெற்கு தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Oct 2020 7:32 AM IST (Updated: 4 Oct 2020 7:32 AM IST)
t-max-icont-min-icon

கடன் வழங்கிய நுண்நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தொழில்கள் நலிவடைந்து உள்ளன. இந்த நிலையில் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே நுண் நிதி நிறுவன (மைக்ரோ பைனான்ஸ்) ஊழியர்கள், கடன் வசூலிக்க செல்லும் போது பெண்களை ஆபாசமாக பேசுவதுடன், அச்சுறுத்தி வருவதாக மகளிர் அமைப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.

எனவே அடாவடி வசூலில் ஈடுபடும் நிதி நிறுவன ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நுண் நிதி நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த கோரி மகளிர் சுய உதவிக் குழுவினரை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், அவர்கள் கடனை திருப்பி செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி கோவை வடக்கு தாலுகா பகுதியில் உள்ள நுண் நிதி நிறுவனங்களுடன் வடக்கு தாசில்தார் மகேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு தரப்பினருக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் கோவை தெற்கு தாலுகா பகுதியில் உள்ள நுண் நிதி நிறுவனங்களுடன் இதுபோன்ற பேச்சுவார்த்தை நடத்த கோரி மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் நேற்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர்தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நுண் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை திரும்ப வசூல் செய்வது குறித்து வருகிற 7-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Next Story