கூடலூரில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் திருட்டு


கூடலூரில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் திருட்டு
x
தினத்தந்தி 4 Oct 2020 8:08 AM IST (Updated: 4 Oct 2020 8:08 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் திருடப்பட்டு உள்ளன.

கூடலூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இது மலைப்பாதை என்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் பல லட்சம் ரூபாய் செலவில் மேட்டுப்பாளையம் முதல் கூடலூர் வரை சாலையோரம் முக்கிய இடங்களில் சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி போக்குவரத்து சிக்னல்களை பொருத்தினர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு கடுமையாக அமலில் இருந்தது. பொதுப்போக்குவரத்து உட்பட அனைத்து வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் இரவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் தேசிய நெடுஞ்சாலையோரம் செயல்பட்டு வந்த சூரிய மின் சக்தியில் செயல்படும் தானியங்கி போக்குவரத்து சிக்னல்களை திருடி சென்று விட்டது. கூடலூர் முதல் ஊட்டி வரை செல்லும் சாலையில் பல இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பேனல்கள் திருடப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட துறைக்கு பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் இல்லாததால், வாகன விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி சிக்னல்களை திருடிச்சென்ற கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story