பெரம்பலூருக்கு ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது


பெரம்பலூருக்கு ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2020 10:52 AM IST (Updated: 4 Oct 2020 10:52 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த வழக்கில் மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கடந்த 21-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த காரை பின்தொடர்ந்து வாகனத்தில் சென்ற போலீசார், பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில் அந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் அடங்கிய 19 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சேலம் வீரபாண்டி நகரில் வசித்து வந்தவருமான சவாய் சிங்கையும், புகையிலை பொருட்கள் மற்றும் காரையும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவாய் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக சவாய் சிங்கிடம், போலீசார் விசாரணை நடத்தியதில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் சங்கர் என்பவருக்கு விற்பனை செய்ய புகையிலை பொருட்கள் கொண்டு வந்ததாக தெரியவந்தது.

இந்த வழக்கில் சங்கர் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருந்ததால், அவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் வசித்து வந்த பவன்குமாரை (வயது 38) கைது செய்த தனிப்படை போலீசார், பெங்களூரு ஜெயா நகரில் வசித்து வந்த, இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபரான ஸ்ரீபால் சிங்கையும் (46), சேலம் வீரபாண்டி நகரில் வசித்து வந்த சுரேசையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை பெரம்பலூருக்கு நேற்று அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறுகையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட சவாய் சிங்கும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீபால் சிங், பவன்குமார், சுரேஷ் ஆகியோரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஸ்ரீபால் சிங் உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து, திருச்சியில் பவன்குமார் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பான வழக்குகள் திருச்சியில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தான் சவாய்சிங், சுரேஷ் மூலம் ஸ்ரீபால் சிங்கிடம் புகையிலை பொருட்களை வாங்கி பெரம்பலூர் சங்கருக்கு விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி வந்த போது பிடிப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீபால் சிங், பவன்குமார், சுரேஷ் ஆகிய 3 பேரை போலீசார் பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் பெரம்பலூர் சங்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story