தடையை மீறி 12 இடங்களில் கிராம சபை கூட்டம்: எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் மீது வழக்கு


தடையை மீறி 12 இடங்களில் கிராம சபை கூட்டம்: எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Oct 2020 2:15 PM IST (Updated: 4 Oct 2020 3:03 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் தடையை மீறி 12 இடங்களில் கிராம சபை கூட்டம் நடத்தியதாக எம்.எல்.ஏ. உள்பட 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காளையார்கோவில்,

ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் ஊராட்சிகளில் நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கிராமசபை கூட்டத்தை அரசு ரத்து செய்தது.

இந்தநிலையில் அரசின் 144 தடை உத்தரவை மீறி தி.மு.க.வினர் சிவகங்கை மாவட்டத்தில் 12 இடங்களில் கிராம சபை கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் அனுமதியின்றி நடத்திய 350 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

இதில் சிவகங்கை மாவட்டம் அரளி கோட்டையில் கொரோனா தடையை மீறி கிராம சபை நடத்தியதாக தி.மு.க. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் மீது திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

சிவகங்கையை அடுத்த இலந்தங்குடி பட்டியில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் மணிமுத்து உள்ளிட்ட 20 பேரின் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும் திருப்புவனத்தை அடுத்த பாட்டம் கிராமத்தில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேங்கைமாறன் உள்ளிட்ட 20 பேர் மீது திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல மேலபசலை கிராமத்தில் கூட்டம் நடத்தியதாக ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை உள்ளிட்ட 40 பேர் மீதும் சின்னகண்ணனூர் கிராமத்தில் அங்குசாமி உள்ளிட்ட 30 பேர் மீதும், இடைக்காட்டூர் கிராமத்தில் முத்து சண்முகநாதன் உள்ளிட்ட 40 பேர் மீதும், முத்தனேந்தலில் ராஜாமணி உள்ளிட்ட 20 பேர் மீதும், புக்குழி கிராமத்தில் குழந்தையை பாண்டியன் உள்பட 25 பேர் மீதும், மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் வேம்பத்தூர் கிராமத்தில் சமய முத்து உள்ளிட்ட 17 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செல்லூர் கிராமத்தில் அடைக்கப்பன் உள்ளிட்ட 20 பேர் மீது பூலான்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல காளையார்கோவிலில் கூட்டம் நடத்தியதாக ஆரோக்கியசாமி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக தி.மு.க.வை சேர்ந்த 350 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story