ராமநாதபுரம் ஊருணியில் மூழ்கி விருதுநகர் பள்ளி மாணவன் சாவு


ராமநாதபுரம் ஊருணியில் மூழ்கி விருதுநகர் பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 4 Oct 2020 4:30 PM IST (Updated: 4 Oct 2020 5:02 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் ஊருணியில் குளித்த விருதுநகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

ராமநாதபுரம்,

விருதுநகர் ரோசல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோபி (வயது 45). இவரது மனைவி மணிமாலா (42). இவர்களுக்கு 2 மகன்கள் உண்டு.

மூத்த மகன் விஸ்வா (18) 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் விமல் (15) 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் மணிமாலா ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகன்களுடன் ராமநாதபுரம் வந்தார்.

நேற்று காலை தனது மகன்களுடன் கோழிப்பண்ணை அருகில் உள்ள பள்ளிக்குளம் ஊருணியில் குளிப்பதற்காக மணிமாலா சென்றார். ஊருணி கரையில் மணிமாலா துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது ஊருணியில் குளித்து கொண்டிருந்த விஸ்வா மற்றும் விமல் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்று சகதியில் சிக்கி கொண்டனர்.

மகன்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிமாலா கத்தி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விஸ்வாவை காப்பாற்றினர். விமல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி விமலின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

விமலின் உடலை கண்டு அவனது தாய் மணிமாலா மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இது குறித்து ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story